ராவணன் இது வித்யாசமான ராமாயணம்
காவல்துறையால் பாதிக்கப்பட்ட ஒரு சமுகத்திற்கும், காவல்துறைக்கும் இடையே நடக்கும் மோதலில் பகடைக்காயாய் சிக்கும் ஒரு பெண். அந்த பெண்ணாலயே அந்த மோதல் எந்த நிலையில் போய் முடிகிறது என்பதுதான் ராவணனின் கதை சுருக்கம்.
திருநெல்வேலி மாவட்டத்திற்கு அருகே உள்ள ஒரு கிராமத்தில் வாழும் விக்ரம் காவல்துறையால் தேடப்படும் ஒரு குற்றவாளி. விக்ரமின் கொட்டத்தை அடக்க அந்த ஊருக்கு வரும் காவல்துறை அதிகாரி பிரித்திவிராஜ், அவருடைய மனைவிதான் ஐஸ்வர்யாராய்.
விக்ரமை கைது செய்ய நேரம் பார்த்துக்கொண்டிருக்கும் பிரித்திவிராஜ், விக்ரமின் தங்கை பிரியாமணியின் திருமணத்தின் போது, விக்ரமை தாக்குகிறார். இந்த தாக்குதலில் குண்டு அடிப்பட்டு தப்பித்து விடுகிறார் விக்ரம். அந்த நேரத்தில் விக்ரமின் தங்கை பிரியாமணியை சூரையாடுகிறது போலீஸ். இதற்கு பழிவாங்க பிரித்திவிராஜின் மனைவி ஐஸ்வர்யாராயை கடத்துகிறார் விக்ரம். கடத்தப்பட்ட மனைவியை மீட்கவும், விக்ரமை கொல்லவும் ஒரு படையுடன் காட்டுக்கு பிரப்படுகிறார் பிரித்திவிராஜ். அப்படி புறப்பட்டவர் காட்டு ராஜாவாக வளம்வரும் விக்ரமை பிடித்தாரா? இல்லையா? என்பது ஒரு புறம் இருக்க, ஐஸ்வர்யாராயை கடத்திச்சென்ற விக்ரமுக்கு ஐஸ்வர்யாராயல் ஏற்படும் மாற்றமும், அதற்கு ஐஸ்வர்யாராயின் ரியாக்சனும் படத்தை மற்றொரு பாதையில் பயணிக்க வைக்கிறது. ஒரு வழியாக
விக்ரமின் பிடியில் இருந்து வெளிவரும் ஐஸ்வர்யாராயை, பிரித்திவிராஜ் ஏற்றுக்கொண்டாரா? இல்லையா?, என்ற கேள்வியுடன் முடிகிறது இராவணன் படம்.
எந்த சினிமாத்தனமும் இல்லாமல் படம் எடுத்த எடுப்பிலே கதைக்குள் பயணிக்கிறது. காவல்துறை அதிகாரியின் மனைவி கடத்தல், அவரைத் தேடி காவல்துறை காட்டுக்குள் பயணிப்பது என்று படம் விறுவிறுப்புடன் நகர்கிறது. உயரமான அருவி, அடர்ந்த காடு, என ஒவ்வொரு காட்சிகளும் நம்மை பிரமிக்க வைக்கிறது.
சுஹாசினியின் வசனங்களில் இருக்கும் கூர்மை, அந்த வசங்கள் சம்மந்தப்பட்ட காட்சிகளில் இல்லை. "மேல்தட்டு மக்கள் இப்படித்தான், நாங்கள் ஒடுக்கப்பட்டவர்கள்" என்று அடிக்கடி வசனம் பேசும் விக்ரம் எப்படி இந்த நிலைக்கு வந்தார் என்பதையும் அழுத்தமாக சொல்லவில்லை. எடுத்துக்கொண்ட கதை வீரியமானதாக இருந்தாலும், திரைக்கதை அந்த வீரியத்தோடு இல்லாமல், ஐஸ்வர்யாரால் விக்ரம் ஈர்க்கப்படுவதையே மையமாகக்கொண்டு முடிகிறது.
விக்ரம் முரட்டு உடம்போடு ஒரு காளையைப்போல வளம் வருகிறார். ஆவேசமாக பேசுவது, தன் தங்கை போலீஸால் அலங்கோலப்பட்டு வரும் போது கண் கலங்குவது, அதே சமயம் ஐஸ்வர்யாராயின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு குழம்புவது என அசத்துகிறார்.
தாஜ்மாஹாலுக்கு அழகு குறைந்தாலும் குறையலாம்! ஐஸ்வர்யாராய்க்கு அழகு குறையாது போலிருக்கிறது. அப்படியே அதே ஐம்பது எடை தாஜ்மஹாலாகவே இருக்கிறார்.விக்ரமுக்கு பயப்படமால் எதிர்த்து நிற்கும் ஐஸ்வர்யா, விக்ரமின் பேச்சில் சலனம் ஏற்பட்டு அதற்கு அவர் கொடுக்கும் முகபாவனை பிரமாதம். அதே சமயம் மலை ஏறுவது, விக்ரமை தாக்குவது என படத்தின் மற்றொரு ஹுரோ போலவே வலம் வருகிறார்.
அமைதியான முகத்துடன் உலாவும் பிரித்திவிராஜ் எதிரிகளை வேட்டையாடும் போது ஆக்ரோசமான போலிஸாகிறார். பிரபு, கார்த்திக் என அவர் அவர் வேலைகளை சரியாக செய்யும் கதாபாத்திரங்கள். இரண்டு காட்சிகளில் வந்தாலும் மனதில் நிற்கும்படி இருக்கிறது பிரியாமணியின் கதாபாத்திரம்.
இயக்குநரின் திரைக்கதைக்கு, தங்களின் கேமராவின் மூலம் உயிர் கொடுத்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர்கள் சந்தோஷ்சிவன் மற்றும் மணிகண்டன். அருவிகளின் ஆக்ரோசத்தையும், காட்டின் அபாயத்தையும் தத்ரூபமாக காட்டிய இவர்களது கேமராக்கள் ஐஸ்வர்யாராயின் அழகையும் அபாரமாக காட்டியிருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சி நம்மை இன்னும் இருக்கையின் நுனியில் அமர செய்கிறது.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட்டாகி இருந்தாலும், படத்துடன் பார்க்கும் போது இன்னும் கூடுதல் சிறப்பு பெருகிறது. பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.
காவல்துறைக்கும், அவர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம்தான் ராவணன். இந்த கதைகளத்தை ரசிகர்களின் மனதில் பதியவைக்க இயக்குநர் மணிரத்னம் எடுத்துக்கொண்ட முயற்சியும், உழைப்பும் கதாபாத்திரங்களின் வாயிலாகவும், காட்சிகளின் வாழிலாகவும் தெரிகிறது.
சீதையை மட்டும் அல்ல ரசிகர்களின் மனதையும் கவருவான் இந்த ராவணன்.